மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சந்திரபாடி மீனவ கிராமத்தில் ஒன்பது இறால் பண்ணைகள் இயங்கிவருகின்றன. அதில் ஒரு பண்ணையில் நிலத்தடி நீரைப் பயன்படுத்த திட்டமிட்டு ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. ஏற்கெனவே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மீனவர்கள் சார்பில், ஆட்சியர், தரங்கம்பாடி வட்டாட்சியர் ஆகியோரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் இது தொடர்பாக எந்த ஒரு அரசு அலுவலரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த மீனவ கிராம மக்கள், இறால் பண்ணையை மூட வலியுறுத்தி சந்திரம்பாடி முதல் பூவம் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த பொறையாறு காவல் ஆய்வாளர் பெரியசாமி மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இது குறித்து மீனவ மக்கள் கூறுகையில், “இங்கு செயல்பட்டுவரும் இறால் பண்ணை, ஆழ்துளைக் கிணறு அமைத்து நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது போன்றவற்றால் எங்கள் பகுதி குடிநீர் உப்பு நீராகிவிடும். கடல்நீர் நிலத்தடி நீருடன் கலந்துவிடும் இடர் அதிகமுள்ளதால் ஆழ்துளை அமைப்பதைத் தடுத்து, இறால் பண்ணைகளை உடனடியாக மூட வேண்டும்.
மீன்வளத் துறை உயர் அலுவலர்கள், இறால் பண்ணை உரிமையாளர்கள் இங்கு வந்தால் மட்டுமே சாலை மறியலைக் கைவிடுவோம், இல்லையெனில் எங்கள் போராட்டம் தொடரும்” என்றனர்.
பின்னர் ஆய்வாளரின் வற்புறுத்தலின்பேரில், மீன்வளத் துறை அலுவலர்கள், பண்ணை உரிமையாளர்களிடம் நாளைய (மார்ச் 27) தினம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண்பதென முடிவுசெய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. பொதுமக்களின் சாலை மறியலால் சந்திரம்பாடி முதல் பூவம் செல்லும் சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'குமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் வராது, திமுக பொய் பரப்புரை செய்கிறது' - முதலமைச்சர்!