மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா சின்னூர் பேட்டை கிராமத்தை சேர்ந்த மீனவர் இளையராஜா. இவரது மகள் ஸ்ரீஜா சந்திரபாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கிறார். ஸ்ரீஜா வகுப்பில் முதல் மாணவியாகவும் உள்ளார்.
தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியீடு
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஒன்றிய அரசின் உதவித்தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வு தேர்வை (NMMS) எழுதியுள்ளார். தற்போது அத்தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் மாணவி ஸ்ரீஜாவின் பெயர் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தன் பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்தார்.
தேர்வுக்கு பின் தான் எழுதிய விடைகளை ஆய்வு செய்த மாணவி 124 மதிப்பெண்கள் கிடைக்கும் என உறுதியான இருந்த நிலையில் மாணவியின் பெயர் விடுபட்டுள்ளது அவருக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப சூழ்நிலை கருதி நன்றாக படித்து எழுதிய தேர்வு முடிவு தெரியாத நிலையில் தனது விடைத்தாள் நகலை கேட்டு ஸ்ரீஜா மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
வழிகாட்டு நெறிமுறைகள் இல்லை
இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர்கள் கூறுகையில், தேர்வு நடத்துவது மட்டும் மாவட்ட கல்வி துறையின் பணி, விடைத்தாள், தேர்வு முடிவுகள் ஒன்றிய அரசு கல்விதுறையின் கீழ் வருகிறது.
இத்தேர்வுக்கான விடைத்தாள் நகலை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லை” என்றனர். இந்நிலையில், இனிவரும் காலங்களில் இதுபோல் எந்த மாணவர்களும் பாதிக்கப்படாமல் தடுக்க முறையான வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் எனபதே பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி: ஊக்கத்தொகை கிடைக்காத அரசுப் பள்ளி மாணவி