மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் இன்று (ஜூன் 9) காலை 6 மணிமுதல் நீடூர், எலந்தங்குடி, அரிவளூர், கிளியனூர், உத்தங்குடி ஆகிய 5 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். சென்னையில் இருந்து வந்த என்ஐஏ(தேசிய புலனாய்வு முகமை) எஸ்பி ஸ்ரீஜீத் தலைமையிலான ஐந்து ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர், ஐந்து குழுக்களாகப்பிரிந்து சோதனை மேற்கொண்டனர்.
மயிலாடுதுறையில் சட்டத்துக்குப் புறம்பாக, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று செயல்பட்டு வருவதாக காவல் துறைக்குத்தகவல் கிடைத்தது. அந்த கும்பல் காரில் தப்பிச்செல்வதை அறிந்த காவலர்கள் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே மடக்கிப் பிடித்தனர். அப்போது அந்த காரில் நீடூரை சேர்ந்த சாதிக் பாஷா என்ற இக்காமா பாஷா, ஜஹபர்அலி, கோவை முகமது ஆசிக், காரைக்கால் முகமது இர்ஃபான், சென்னை அயனாவரம் ரஹ்மத் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினர் அவர்களை விசாரித்தபோது சாதிக் பாஷா துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளார். பின்னர் அவர்கள் 5 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு அண்மையில் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் இவர்கள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதி மற்றும் ஆட்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று சோதனை நடைபெற்றுள்ளது. மேலும், டெல்லியில் பதியப்பட்ட வழக்கு ஒன்றில் ஆதாரங்களைத் திரட்டுவதற்காகவும் இந்த சோதனை நடைபெற்றதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தனர். சுமார் 7 மணி நேரமாக நடைபெற்று வந்த சோதனை நிறைவுபெற்றதையடுத்து பாஸ்போர்ட், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அலுவலர்கள் கைப்பற்றியுள்ளனர்.
ஆவணங்களை மயிலாடுதுறை காவல்நிலையம் எடுத்துச்சென்று ஆய்வு செய்தபின் சென்னை எடுத்து சென்றனர். இந்த சோதனை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பரபரப்பு நிலவியது. சோதனை குறித்த விவரங்களை அலுவலர்கள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
இதையும் படிங்க: புதிதாக கொளத்தூர் காவல் மாவட்டம் உருவாக்கம்