மயிலாடுதுறை தருமபுர ஆதீனம், 26ஆஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கடந்த 4ஆம் தேதி முக்தியடைந்தார். முக்தியடைந்த அவருக்கு இன்று பத்தாம் நாள் குருபூஜை விழா நடைபெற்றது.
அதன் பின்னர் புதிய ஆதீனம் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு புதிய ஆதீனம் ஞானபுரீஸ்வரர், தருமபுர ஈஸ்வரர் ஆலயங்களில் தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து 27ஆவது குருமகா சந்நிதானத்திற்கு ஞான அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் தருமபுர ஆதீன ஒடுக்கத்தில் 27ஆவது குருமகா சன்னிதானம், ஞான பீடத்தில் அமர வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆதீன மரபுப்படி சிறப்பு பூஜைகளை திருப்பனந்தாள் இளவரசு திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் செய்தார்.
தொடர்ந்து ஆதீன பண்டைய மரபுப்படி ஓலைச்சுவடியில் தங்க எழுத்தாணியால் கையெழுத்திட்டு 27ஆவது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், மதுரை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்கள், பக்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: முக்தியடைந்த தருமபுரம் ஆதீனம் - மாவட்ட ஆட்சியர் அஞ்சலி!