மயிலாடுதுறை மாவட்டத்தில் புரெவி புயல் கனமழை நான்காவது நாளான இன்றும் (டிச.05) கனமழை பெய்து வருகிறது. இதனால் சேத்தூர் அருகே செல்லும் நண்டலாற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நண்டலாறானது சேத்தூர், உக்கடை, விளாகம், பாலூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பாசன வாய்க்கால்களுக்கு வடிகாலாக உள்ளது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஆற்றுநீர் பாசன வாய்க்கால்கள் மூலம் விளைநிலங்களில் உட்புகுந்து வருகிறது.
சேத்தூர் பகுதியில் 600க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா பயிர்களில் 350 ஏக்கரும் மேல் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. இதேபோல் உக்கடம், பாலூர், விளாகம், அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் நண்டலாறு மற்றும் பாசன வாய்க்கால்கள் மழை வெள்ளத்தால் 1000 ஏக்கருக்கும் மேல் சம்பா பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
நான்கு நாட்களாக பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் செலவு செய்து பயிர்கள் வளர்ந்து வளர்ந்து வரும் தருவாயில், தண்ணீரை வடிய வைக்க வழியின்றி தவித்து வருகின்றனர்.
எனவே, தமிழ்நாடு அரசு உரிய முறையில் பயிர்சேதம் குறித்து கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு! - சென்னை வந்தது மத்திய குழு!