நாகப்பட்டினம்: அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், நாகப்பட்டினம் நகராட்சியில் போட்டியிட நேற்று (பிப்ரவரி 3) தங்களது வேட்புமனுவைத் தாக்கல்செய்ய ஆதரவாளர்களுடன் குவிந்தனர். அப்போது நாகப்பட்டினம் நகராட்சியில் நான்காவது வார்டு அதிமுக சார்பில் போட்டியிடும் அமிர்தவல்லி என்ற பெண் வேட்பாளர் தனது வேட்புமனுவைத் தாக்கல்செய்ய வந்தார்.
விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்த அமிர்தவல்லி, நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான ஜெயகிருஷ்ணனிடம் வேட்புமனுவைத் தாக்கல்செய்தார். வேட்புமனுவைப் பரிசீலனை செய்த தேர்தல் நடத்தும் அலுவலர் வாக்காளர் பட்டியலில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் இடம் பெறவில்லை எனக் கூறி அம்மனுவைத் திருப்பியளித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் வேட்பாளர் தனது பெயரை நீக்கம் செய்ததற்கான காரணத்தைக் கேட்டு வாதிட்டார். அப்போது உங்களது பெயர் நீக்கப்பட்டு இறந்தவர் பட்டியலில் உள்ளதாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் கூறினார். இதனால் மேலும் அதிர்ச்சிக்குள்ளான அமிர்தவல்லி, உயிருடன் இருக்கும் என்னை இறந்தவர் பட்டியலில் எப்படி? சேர்த்தீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் நாகை நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
காலையில் வேட்புமனு தாக்கல்செய்ய வந்த தன்னிடம் பெயர் பட்டியலைச் சரிபார்க்கிறோம் எனக்கூறி அலுவலர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ள அவர், உயிருடன் இருக்கும் தன்னை இறந்தவர் பெயர் பட்டியலில் சேர்த்ததற்கான காரணத்தை விளக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தன் பெயரை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்த்து நான்காவது வார்டில் போட்டியிடத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக நிர்வாகிகள் மனைவிகளுக்குத் தேர்தலில் வாய்ப்பு: மகளிரணி கொந்தளிப்பு!