நாகப்பட்டினம்: சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு 'செரியாபாணி' பயணிகள் கப்பல் போக்குவரத்து, கடந்த 14ஆம் தேதி தொடங்கப்பட்டது. பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு வரும் 20ஆம் தேதி வரை மட்டுமே கப்பல் போக்குவரத்து இயக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 150 பேர் பயணம் செய்ய வசதி கொண்ட 'செரியாபாணி' கப்பலில், கடந்த 16ஆம் தேதி 15 பயணிகளுடனும், இன்று (அக்.19) 23 பயணிகளுடன் மட்டுமே இலங்கை சென்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை வரும் 23ஆம் தேதி முதல் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன் காரணமாக 20ஆம் தேதியுடன் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு செல்லும் பயணிகள் கப்பலின் போக்குவரத்து நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் இங்கிருந்து இலங்கைச் சென்ற பயணிகள் மீண்டும் கப்பலில் திரும்ப வேண்டும் என்றால் 20ஆம் தேதி வரை காத்திருந்து பின்னர் திரும்ப வேண்டும் என்பது சுற்றுலா சென்ற பயணிகளிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகம் விரிவாக்கம் பணிகள் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின்னர் ஜனவரி மாதம் முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
மேலும், கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதால், நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் செல்லும் 'செரியாபாணி' கப்பல் கேரளா மாநிலம் கொச்சின் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் துறைமுக அதிகாரிகள் மூலம் தகவல்கள் கிடைத்துள்ளன.