தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை கொண்டு நாகை, கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடித்து வருகின்றனர். இந்த வலைகள் மூலம் பிடித்து வரும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்களை கடந்த 15 நாட்களாக மீன்வளத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து, மீனவர்களுக்கு அபராதம் விதித்து பெரும் நெருக்கடியை கொடுத்து வருகின்றனர்.
இதனால் நாகை, கடலூர் மாவட்டத்தில் மீன்வளத்துறையினருக்கும், மீனவர்களுக்குமிடையே பெரும் பிரச்னை எழுந்து வருகிறது. இந்நிலையில், நாகை மாவட்டம் நம்பியார்நகர் கிராமத்தில் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை பறிமுதல் செய்யும் மீன்வளத்துறை அலுவலர்களைக் கண்டித்து அப்பகுதி மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவெடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோன்று அப்பகுதி மீனவப் பெண்கள் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். மேலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தில் கை வைக்கும் நாகையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு குடும்பத்துடன் தீக்குளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து நாகை நம்பியார் நகர் கிராமத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தங்களது தடைசெய்யப்பட்ட வலையை பயன்படுத்த அனுமதி தரவேண்டும் அல்லது அரசால் தடை செய்யப்பட்ட சீன எஞ்சின் உள்ளிட்ட அனைத்தையும் ஒரு சில மாவட்டத்தில் பயன்படுத்த அனுமதி அளிப்பது போல இங்கும் அனுமதி அளிக்கவேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல மயிலாடுதுறை வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட பூம்புகார், திருமுல்லைவாசல், மடவமேடு உள்ளிட மீனவ கிராமங்களிலும் தடைசெய்யப்பட்ட வலைகள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள வணிகர்கள் மீனவர்களுக்கு ஆதரவாக கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நாகையில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்!