கடந்த 40 நாள்களாக நாகை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவில்லை.
இதனையடுத்து, இன்று விவசாயிகளின் குறைகளை கேட்கும் விதமாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் விவசாயிகளுடன் காணொலி காட்சி வாயிலாக விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
இந்த காணொலி காட்சி குறைதீர் கூட்டமானது மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களுடன் ஐந்து முதல் பத்து விவசாயிகள் கலந்து கொண்டு ஒவ்வொரு பகுதி விவசாயிகளின் ஒட்டுமொத்த கோரிக்கைகளையும் கருத்துகளையும் பதிவு செய்தனர்.

- மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இருக்கிறது, பருவ சீதோஷ்ண நிலையும் சீராக விவசாயத்திற்குச் சாதகமாக இருக்கின்றது, இதனால் இந்தாண்டு சாகுபடி பரப்பு கூடுதலாக எதிர்பார்க்கப்படுவதால் நடப்பு குறுவை சாகுபடி பணிக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் மாத தொடக்கத்தில் தண்ணீர் திறந்து விட அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்
- குறுவை பாசனத்திற்குத் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்கக் குடிமராமத்துப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், குறுவை சாகுபடிக்குத் தேவையான விதை நெல், உரங்கள், பூச்சி மருந்துகள் ஆகியன தடையின்றி கிடைக்க வழிவகை செய்திடவேண்டும்
- 2020ஆம் ஆண்டில் குறுவைத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்திட அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும், நடப்பு மற்றும் சென்ற ஆண்டிற்கான பயிர்க் காப்பீட்டுத் தொகையினை விரைவில் பெற்றுத் தரவும், காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்ய எந்தவித தடையின்றி அனுமதி வழங்க வேண்டும்.
- சீர்காழி பகுதியில் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேளாண்மைத் துறைக்கு அறிவுறுத்திட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை விவசாயிகள் வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து, பேசிய ஆட்சியர் விவசாயிகளால் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தையும் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.
இதையும் படிங்க : என்எல்சி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து: 8 பேர் கவலைக்கிடம்