நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் இந்த ஆண்டு பருத்தி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு அதிக அளவில் பருத்தியை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். 700 குவிண்டால் மட்டுமே வைக்க வசதி இருந்த நிலையில், வாரம்தோறும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட குவிண்டால்களை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
திறந்தவெளியில் வைக்கும் பருத்தியை இந்திய பருத்திக் கழக அலுவலர்கள் கொள்முதல் செய்யாததால், தனியார் வியாபாரிகள் தரமான பருத்திகளை மிகக் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதாகவும் அரசின் மிக குறைந்த ஆதார விலை 5,232 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்று கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், விவசாயிகளின் நலன் கருதி நாகை மாவட்ட விற்பனை குழு செயலாளர் கோ.வித்யா அறிவுறுத்தலின் பெயரில் முதல் முறையாக செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இந்த வாரம் விவசாயிகள் கொண்டு வந்த சுமார் 3,000 குவிண்டால் பருத்தியையும், புதிதாக கலைமகள் கலை கல்லூரியில் சுமார் 1500 குவிண்டால் பருத்தியையும் ஏலத்திற்காக பிரித்து பாதுகாப்பாக வைத்தனர்.
இதில் இந்திய பருத்திக் கழக அலுவலர்கள் கலந்து கொண்டு சுமார் 4,200 குவிண்டால் பருத்தி அதிகபட்ச விலை ரூ. 5,550க்கும், குறைந்தபட்ச விலை ரூ. 5,278க்கும் கொள்முதல் செய்தனர். 95 விழுக்காடு பருத்தியை அரசு அலுவலர்கள் கொள்முதல் செய்தனர்.
மேலும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு அதிகபட்ச விலை 4.500க்கும், குறைந்தபட்ச விலை 4,200க்கும் கொள்முதல் செய்தனர். இரண்டு இடங்களில் ஏலம் நடைபெற்றதால் தங்கள் பருத்திக்கு நல்ல விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.