மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் கிழக்கு கடலோர மாநிலங்களில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரை, 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் விதிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால், 68 நாட்களை தமிழ்நாட்டில் உள்ள கடலோர மாவட்ட மீனவர்கள் மீன்பிடி தடைக் காலமாகவும், ஊரடங்கு உத்தரவாகவும் கடைப்பிடித்து வந்தனர்.
இதையடுத்து ஊரடங்கு உத்தரவின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், இன்று முதல் தமிழ்நாடு மீனவர்கள் கடலுக்குச் செல்லலாம் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருந்தன. மத்திய, மாநில அரசுகளின் அறிவிப்பை ஒட்டுமொத்த மீனவர்களும் வரவேற்கவில்லை.
இறால்,நண்டு, கணவாய் மீன்களை ஐரோப்பிய, ஆசிய கண்டங்களுக்கு ஏற்றுமதி செய்ய வழிவகை இல்லாததால், நாகை மாவட்டத்தில் உள்ள 54 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 1 லட்சம் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.
இதன் காரணமாக நாகை, தரங்கம்பாடி, பூம்புகார், பழையார் உள்ளிட்ட துறைமுகங்களில் 2 ஆயிரம் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தற்போதைய சூழலில் விசைப்படகுகளுக்குத் தேவையான டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்வதற்குப் போதிய பணம் இல்லை எனக்கூறும் மீனவர்கள், ஐரோப்பியா, ஆசிய கண்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்களை எடுத்துச் செல்ல, கார்கோ விமானப் போக்குவரத்தை இயக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்; அதன்மூலம் மட்டுமே தங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.