நாகை மாவட்டம் தொடுவாய், மூவர்க்கரை, கொட்டாய்மேடு, சாவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே விசைப்படகில் மீன்பிடிக்க வந்த காரைக்கால் மீனவர்களின் விசைப்படகு நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் ஃபைபர் படகில் மோதியது.
அதில், ஃபைபர் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தொடுவாய் மீனவர்கள் கடலில் விழுந்ததில் பலத்த காயம் மற்றும் அவர்களது படகுகள் உள்ளிட்டவற்றில் சேதம் ஏற்பட்டது. இதனால் நாகை மீனவர்களுக்கும் காரைக்கால் மீனவர்களுக்கும் இடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் நாகை மாவட்டம் தொடுவாய், மூவர்க்கரை, மேலமூவர்கரை, கொட்டாய்மேடு, சாவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஐந்து கிராம மீனவர்கள் காரைக்கால் மீனவர்களைக் கண்டித்து இன்று இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, நாகை மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்திய காரைக்கால் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அதிவேக குதிரைத்திறன் கொண்ட இன்ஜின், சுருக்கு வலைகளைத் தடை செய்ய வேண்டும் என்று கூறியும், நாகை மாவட்ட ஆட்சியரிடம் ஐந்து கிராம மீனவர்கள் புகார் மனு அளித்தனர்.
தங்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் சீன இன்ஜின்களை தடை செய்து சிறு தொழில் செய்யும் மீனவர்களைக் காக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைவு!