நாகப்பட்டினம்: மயிலாடுதுறை ஒன்றியம் மன்னம்பந்தல் ஊராட்சிமன்றத் தலைவரான பிரியா பெரியசாமி, ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் அமலா மற்றும் அவரது கணவர் ராஜகோபால்ஆகியோர் தன் மீது சாதி ரீதியாக பாகுபாடு காட்டுவதாக குற்றஞ்சாட்டி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும், ஊராட்சி மன்றத் தலைவருக்கு ரோலிங் சேர் வாங்கியதை சாதி ரீதியில் விமர்சித்து பேசியதாகவும், வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடும் தொகைக்கு கமிஷன் கேட்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதையடுத்து, மயிலாடுதுறை காவல்துறையினர் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் அமலா மற்றும் அவரது கணவர் ராஜகோபால் ஆகிய இருவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், அவமதிக்கப்பட்ட பெண் ஊராட்சிமன்றத் தலைவர் பிரியா பெரியசாமிக்கு நீதி கேட்டு மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று (அக்டோபர் 16) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட செயலாளர் நாகை மாலி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் அவரது கணவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தீண்டாமை வன்கொடுமைக்கு எதிராக முழக்கமிட்டனர்.