புதிதாக உருவாகியுள்ள மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட, மூங்கில் தோட்டத்தில் தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டு, அளவீட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளால், குடியிருப்பு பகுதிகளுக்கு பாதிப்பு இருக்காது என்று கூறப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு திறந்தவெளி இடங்களை விட்டுவிட்டு குடியிருப்பு பகுதி அருகே இடங்களை அளவீடு செய்யப்படுவதாகக் கூறி பொதுமக்கள் பணிகளை தடுத்து நிறுத்தினர்.
இந்த பிரச்சனை தொடர்பாக மாவட்ட தனி அலுவலர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று (செப்.25) அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று 50க்கு மேற்பட்ட வீடுகளிலும், சாலை ஓரங்களிலும் கறுப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பை அப்பகுதி மக்கள் வெளிப்படுத்தி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியிருப்பு பகுதிகளில் நிலங்களைக் கையகப்படுத்தினால் கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் ஈட்டும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அப்பகுதி மக்கள் முழக்கமிட்டனர்.