நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தனியார் கணினி பயிற்சி நிலையத்தை மனித நேய மக்கள் கட்சி நிறுவனத் தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா திறந்துவைத்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், காரைக்கால் அதானி குழும துறைமுகத்தின் நிலக்கரி துகள்கள் காற்றில் பரவுவதால் நாகூர் - நாகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் பாதிப்படைவதற்குக் கண்டனம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் தமிழ்நாட்டில் பாஜகவை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான கட்சி பாஜக என்பதால் தான் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது என்றார். எடப்பாடியும், எடப்பாடி பழனிசாமியின் முதுகில் பயணித்து டெல்லிக்கு செல்ல நினைப்பவர்களும் தப்பு கணக்கு போடுகின்றனர் என்றார்.
இஸ்லாமியர்கள் குடியுரிமை, இலங்கைத் தமிழர்களின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டபோது துணை நின்ற கட்சி அதிமுக என்று கடுமையாகச் சாடினார். சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் அதிமுகவும் எடப்பாடியும் என்று கூறிய அவர், சிறுபான்மை மக்களை வெறும் வார்த்தைகளை மட்டுமே சொல்லி எடப்பாடி பழனிசாமி ஏமாற்றியுள்ளார்.
அது மட்டுமில்லாமல் சசிகலா, தினகரன் என யாருக்கும் உண்மையாக இருந்ததில்லை என்றார். சிறுபான்மையினரோடு கூட்டணி வைத்து எடப்பாடி பழனிசாமி காதில் பூ சுற்றும் வேலையைச் செய்து வருகிறார் எனவும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதியிலும் வெற்றி பெறும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு.. குரூப்-2ஏ தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!