மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்காவில் உள்ள தென்னலக்குடி கூப்பிடுவான் உப்பனாறு நீர்த்தேக்க அணை 78.80 லட்சம் ரூபாயில் தூர்வாரி சீரமைக்கப்பட்டது. அதனை வேளாண்மைதுறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
டெல்டா பணிகள்
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி டெல்டா மாவட்டங்ளில் 68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 647 பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
தற்போதைய நிலையில் 80 விழுக்காடு பணிகள் நிறைவுற்றுள்ளன. கடைமடைப் பகுதிக்கு பாசனத்திற்கு தண்ணீர் வருவதற்குள் அனைத்து வகை வாய்க்கால்களையும் தூர்வாரும் பணிகள் முடிவடையும்.
ஹைட்ரோ கார்பன்
மேலும், பாதுகாக்கபட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் மற்றும் எண்ணெய் துரப்பண பணிகளை தொடங்க அனுமதிக்க மாட்டோம். அதுதொடர்பான அறிக்கை வந்தவுடனேயே முதலமைச்சர் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். எனவே, இதுபோன்ற திட்டங்கள் இங்கு செய்படுத்த விடமாட்டோம்" என்றும் தெரிவித்தார்.