மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கூட்டுறவுத்துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற 70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், சுமார் 6 ஆயிரத்து 850 உறுப்பினர்களுக்கு ரூ.51.31 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் அமைச்சர் பேசியதாவது, “இந்தியாவில் கூட்டுறவுத் துறை மிகச் சிறப்பாக செயல்படுகின்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. கடந்த காலங்களில் கூட்டுறவுத்துறை செயல்படாத நிலை இருந்தபோது, 2006ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றவுடன், தமிழ்நாட்டில் இருக்கின்ற 22 லட்சத்து 40 ஆயிரம் விவசாயிகள் பயன் பெறும் வகையில், ரூ.7 ஆயிரம் கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்தார்.
கூட்டுறவு சங்கங்களுக்கு 5 ஆண்டு காலம் என ஆண்டுக்கு ரூ.1,500 கோடி அரசு நிதியிலிருந்து வழங்கி, கூட்டுறவு சங்கத்தை செயல்பட வைத்தவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. 2022 - 2023-இல் முதலமைச்சர் விவசாயக் கடனாக ரூ.10 ஆயிரம் கோடிக்கும் மேலாக வழங்கியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில், 5 பவுனுக்கு குறைவாக நகைக்கடன் பெற்றுள்ளவர்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்.
அதன்படி, 5 ஆயிரத்து 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்ததால், அதன் மூலம் தமிழ்நாட்டில் இருக்கின்ற 13 லட்சத்து 12 ஆயிரம் குடும்பங்கள் பயனடைந்தனர். மேலும், தமிழ்நாட்டில் 1 லட்சத்து 17 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 2 ஆயிரத்து 715 கோடி கடனுதவிகளை தள்ளுபடி செய்தவர், தமிழ்நாடு முதலமைச்சர். இதன் மூலம் 15 லட்சத்து 88 ஆயிரம் மகளிர் குழு உறுப்பினர்கள் பயன் பெற்றுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் 1,217 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.13.70 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 ஆயிரத்து 71 மகளிர் குழு உறுப்பினர்கள் பயன் பெற்றுள்ளனர். இன்றைய தினம் 6 ஆயிரத்து 850 உறுப்பினர்களுக்கு ரூ.51.31 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
மயிலாடுதுறை நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்த முதலமைச்சர் ரூ.86 கோடி ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கியுள்ளார். மேலும், விவசாயிகளுக்கு உரிய காலத்தில் கடனுதவிகளை வழங்கி, அவர்களுக்கு எல்லா வகையிலும் பக்க பலமாக கூட்டுறவுத் துறை செயல்பட வேண்டும்" என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களும், கூட்டுறவு வார விழவை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகளையும் அமைச்சர் வழங்கினார். இதில், எம்.பி ராமலிங்கம், எம்எல்ஏக்கள் ராஜகுமார், நிவேதாமுருகன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாளவிநாயகன் அமுல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.