மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ் பெற்ற மயூரநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் 50 வயதான அபயாம்பிகை என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களின் செல்லப் பிள்ளையாக அபயாம்பிகை யானை வலம் வருகிறது. காலில் கொலுசு, குளிப்பதற்கு மிகப்பெரிய ஷவர், யானை கொட்டகையில் காற்று வருவதற்காக ராட்சச மின்விசிறி, ஆகியவை ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சார்ந்த கர்நாடக இசை பாடகி அபூர்வா ராமசேஷன் சார்பில் யானைக்கு தீபாவளியை முன்னிட்டு நேற்று (அக்-22) 20,000 ரூபாய் மதிப்பில் புதிய உடை வழங்கப்பட்டது. முன்னதாக ஆலயத்தில் உள்ள விநாயகர் சன்னதியில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு தொடர்ந்து யானை அபயாம்பிகைக்கு கஜ பூஜை செய்யப்பட்டது.
இதனை அடுத்து யானைப் பாகன்கள் செந்தில் மற்றும் வினோத் ஆகியோர் யானைக்கு முகப்பட்டம் எனப்படும் முன்னலங்காரம், உடலை சுற்றி ஓம் என்ற எழுத்து ஜரிகையால் பொறிக்கப்பட்ட உடல் போர்வை, கழுத்தில் வஸ்திரம் காலில் அலங்கார பட்டைகள் ஆகியவை அணிவிக்கப்பட்டு தீப ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து காய்கறிகள் மற்றும் பழங்களை பக்தர்கள் உணவாக வழங்கி யானையுடன் முன்னதாகவே தீபாவளியை கொண்டாடினர்.
இதையும் படிங்க:தீபாவளி விடுமுறை... ரூ.600 கோடி மது விற்பனைக்கு இலக்கு...