நாகை மாவட்டம், மயிலாடுதுறை - திருவாரூர் சாலையின் அருகேயுள்ள கேணிக்கரை பகுதியில் ஹாஜீ என்பவருக்கு சொந்தமான கட்டடம் ஒன்று உள்ளது. இந்தக் கட்டடத்தின் முதல் தளத்தின் மேல் நகராட்சி அனுமதி பெறாமல் தனியார் நிறுவனத்தின் ஆறு டன் எடையுள்ள ஒயர்லெஸ் டவர் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதைப் பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை பயன்படுத்திக்கொள்ள நினைத்த தனியார் நிறுவனத்தினர் ஒயர்லலெஸ் டவருக்கு மின் இணைப்பு கொடுக்க மின்வாரிய ஊழியர்கள் வந்திருந்தனர். இதையறிந்து அங்கு வந்த பொதுமக்கள் மின் இணைப்பு கொடுக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், "இப்பகுதியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். வலுவில்லாத கட்டடத்தில் ஆறு டன் எடை கொண்ட டவரை அனுமதி பெறாமல் அமைப்பதனால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டு நகராட்சி அலுவலர்கள் கட்டடத்தை ஆய்வு செய்து , உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, மின் வாரிய ஊழியர்கள் கூறுகையில், "மதுரை கிளை ஏர்டெல் நிறுவனம் சார்பில் ஆன்லைனில் மின் இணைப்பு பெறுவதற்கு பணம் கட்டியதால் ஆய்வு செய்ய வந்தோம். அப்போது, மின் இணைப்பு கொடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் எந்தப் பணியும் செய்யவில்லை என்றனர்.
இதையும் படிங்க:ஈரோட்டில் கரோனா தாக்கம் குறைவு!