மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான வள்ளலார் கோயில் எனப்படும், குரு பரிகார தலமாக விளங்கும் ஶ்ரீஞானாம்பிகை சமேத ஶ்ரீ வதான்யேஸ்வரர் கோயில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், தருமபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், சூரியனார் கோயில் ஆதீனம், துழாவூர் ஆதீனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வதான்யேஸ்வரர் ஆலயம்: மயிலாடுதுறையில் காவிரியின், வடகரையில் உத்தரமாயூரம் என்றழைக்கப்படும் கைகாட்டும் வள்ளலாக, ஞானத்தை அள்ளித்தரும் பெருமானாக, பழமையும் புகழும் வாய்ந்த ஶ்ரீ ஞானாம்பிகை உடனாகிய வதான்யேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயில், ரிஷப தேவரின் கர்வத்தை அடக்கி தட்சிணாமூர்த்தியாக சிவபெருமான் காட்சி தந்த பெருமைக்குரிய தலம்.
வேறு எந்த பகுதியிலும் இல்லாதவாறு, நந்தியின் மேல் ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். ஐந்து நிலை ராஜகோபுரங்கள் கொண்ட இக்கோயில் 19 ஆண்டுகளுக்குப்பிறகு புனரமைக்கப்பட்டு இன்று (செப்-10) மகா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது.
கும்பாபிஷேகம்: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 3 ஆம் தேதி, பூர்வாங்க பூஜைகள், வேதியர்கள் மந்திரம் ஓத, தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் குடங்களில், காவிரி நதியில் இருந்து புனித நீர் எடுக்கப்பட்டு ஐந்து யானைகள் மீது ஏற்றப்பட்டு ஊர்வலமாக ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாக சாலை பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் 8 கால யாகசாலை பூஜை இன்று நடைபெற்றது.
தருமபுர ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ கையிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற 8ஆம் கால யாகசாலை பூஜையில் ஹோமங்கள், மகா பூர்ணாஹூதி மகாதீபாரதனை செய்யப்பட்டு பூஜைகள் நிறைவடைந்தன. மங்கல வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய குடங்கள், சிவாச்சாரியார்கள் தலைமையில் யாகசாலையில் இருந்து ஆலயத்தை சுற்றி வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்தது.
சுவாமி கருவறை, தங்க கலசம், மேதா தட்சிணாமூர்த்தி தங்க கலசம், அம்பாள் ராஜகோபுரங்கள் உள்ளிட்ட அனைத்து கோபுர கலசங்களுக்கும் ஒரே நேரத்தில் வேதியர்கள் மந்திரங்கள் முழங்க, சிவ வாத்தியங்கள் ஒலிக்க, புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தில் மதுரை ஆதீன மடாதிபதி, சூரியனார் கோயில் ஆதீன மடாதிபதி, துழாவூர் ஆதீன மடாதிபதி, மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மீனா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் இப்பகுதியில் போலீசார், பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: LIVE : மயிலாடுதுறை ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஶ்ரீ வதான்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா!