மயிலாடுதுறை: காவிரி டெல்டாவின் கடைக்கோடி நகரமான மயிலாடுதுறை, சுற்றிலும் கிராமங்கள் சூழ்ந்த சிறிய மண் மனம் மாறாத நகரமாகும். இந்த நகரத்தில் பொழுதுபோக்குக்காக அமைந்திருந்த ஐந்து சினிமா திரையரங்குகளில் முக்கியமான ஒன்று, நகரின் மையப் பகுதியில் உள்ள பியர்லெஸ் திரையரங்கு.
வெள்ளித்திரை, சின்னத்திரை, கையடக்க செல்போன்கள் என்று திரையின் வடிவம் மாறிக்கொண்டே இருந்த காரணத்தால், மாற்றத்திற்கு உள்ளாக முடியாமல் தனது கலை உலக பயணத்தை இன்றுடன் நிறைவு செய்கிறது இந்த பியர்லெஸ் திரையரங்கம். 1962ஆம் ஆண்டு ஏ.வி.எம் தயாரிப்பில் சிவாஜி கணேசன், சாவித்திரி, குழந்தை நட்சத்திரமாக கமல் நடிப்பில் வெளிவந்த "பார்த்தால் பசி தீரும்" திரைப்படத்தின் மூலம் தனது முதல் திரைப்பயணத்தை துவங்கியது இந்த திரையரங்கம்.
60, 70, 80 மற்றும் 90ஸ் கிட்ஸ்கள் வரை உள்ளவர்களுக்கு, பொழுதுபோக்கு அம்சமாக திகழ்ந்த பால்கனியுடன் கூடிய இந்த திரையரங்கில், முந்தானை முடிச்சு, தூறல் நின்னுபோச்சு, திரிசூலம், கரகாட்டக்காரன், அம்மன்கோவில் கிழக்காலே, மனிதன், படையப்பா, சம்சாரம் அது மின்சாரம், சின்னதம்பி, பாட்ஷா உள்ளிட்ட 100 நாட்கள் வெள்ளி விழா கண்ட எண்ணற்றத் திரைப்படங்கள், இந்த தியேட்டரில் திரையிட்ட போது படத்தை பார்ப்பதற்கு கட்டுக்கடங்காத கூட்டம் முண்டியடித்தது.
ஆனால் இப்போது, 50 வயதுகளில் இருக்கும் பலர் பள்ளி நாட்களில், கல்லூரி நாட்களில் இந்த தியேட்டருக்கு வந்தது, மெல்ல நினைவு அசைபோடும் நாட்களாக அமைந்துள்ளது. பழமை மாறாமல் மரப்பலகையில் உள்ள இருக்கையுடன் உள்ளதால், இந்த தியேட்டருக்கு மக்கள் வருகை புரிவது குறைந்து போனது.
மேலும் புதுப்பிக்கப்படாமல், காதோரம் நரைத்த வெள்ளை முடியுடன் கதை பேசும் முதியவர் போல் முதுமையாகிப் போன இந்த தியேட்டர், நேற்றுடன் (டிச.31) தனது 62 ஆண்டு கால கலைப்பயணத்தை ராம்தேவ் இயக்கத்தில் பாக்கியராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள 'மூன்றாம் மனிதன்' படத்துடன் நிறுத்தி கொண்டது. 60, 70, 80 மற்றும் 90ஸ் குழந்தைகளுக்கு ஒவ்வொரு திரைப்பட அனுபவமும் ஓராயிரம் கதைகளைச் சொல்லும்.
பெரும்பாலும் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் திரையரங்கம் சென்று திரைப்படம் பார்ப்பதே எட்டாக்கனியாக இருந்த காலங்கள் எல்லாம் உண்டு. திருமணத்திற்கு பிறகு கணவருடன் பார்த்த முதல் படம், காதலர்களாக கார்னர் சீட்டில் அமர்ந்து பார்த்தப்படம், சிறு வயதில் முதன் முதலில் திரையரங்கம் சென்று பார்த்த படம் என நாம் திரைப்படங்கள் பற்றி எதை நினைவு கூர்ந்தாலும், எந்த திரையரங்கில் பார்த்தோம் என்று திரையரங்கின் பெயரைக் கூற மறக்க மாட்டோம்.
அப்படி கால மாற்றத்துக்கு ஏற்றவாறு பல திரையரங்குகள் மாற்றியமைக்கப்பட்டு, டிக்கெட் கட்டணமும் உயர்த்தப்பட்டது. ஆனால், 'பியர்லெஸ்' திரையரங்கத்தில் மட்டும் ஏசி, சீட்டுகள் உள்ளிட்டவை மாற்றி அமைக்கப்படாமல், தனி திரையரங்கிற்கு அரசாங்கம் நிர்ணயம் செய்த டிக்கெட் விலையை மட்டுமே வசூலித்து வந்தது. இதனால் மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற திரையரங்கமாக இந்த 'பியர்லெஸ்' திரையரங்கம் இருந்து வந்தது.
ஒரு காலத்தில் அனைத்து தரப்பினராலும் பெரிதும் விரும்பப்பட்டு, பல ஹிட் படங்களை ஓஹோ என்று ஓட்டிக் கொண்டிருந்த திரையரங்கம் தற்போது மூடப்பட்டுள்ளது, அந்த திரையரங்கத்தில் பல இனிமையான நினைவுகளை சுமந்து கொண்டிருக்கும் திரை ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வகையில், இது குறித்து கேள்விப்பட்ட சினிமா ரசிகர்கள் நேற்று தியேட்டருக்கு வருகை புரிந்து, செல்பி எடுத்து தங்களின் பொழுது போக்கு அம்சமாக இருந்த பியர்லெஸ் தியேட்டரின் பழைய கதைகளைப் பேசி, நினைவுகளைப் பகிர்ந்து சோகத்தில் ஆழ்ந்தனர்.
மேலும், தியேட்டரில் 40 அண்டுகாலமாக பணியாற்றிவரும் பூபதி என்பவருக்கு சால்வை அணிவித்து, தியேட்டரின் நினைவாக அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இன்னும் சில ஆண்டுகளில் இந்த இடம் அடுக்குமாடி வளாகங்களாகவோ, வணிக பகுதியாகவோ மாறக்கூடுமானால் அதன் வெற்றி சரித்திரம் வரலாற்றில் நிலை பெற்ற ஒன்றாகும். மேலும், இந்த திரையரங்கத்தை இடித்து வேறு ஏதும் கட்டிடம் கட்டாமல், மீண்டும் திரையரங்கமாகவே கொண்டுவர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: தளபதி 68வது படம் அமெரிக்காவை அதிர வைத்த தனி ஒருவனின் கதையா 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'?..