மயிலாடுதுறை: பொங்கல் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.1,000 உடன் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே அரசின் முந்தைய அறிவிப்பில் கரும்பு இடம் பெறாதது, கரும்பு விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். மேலும் இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே நேற்று (டிச.28), பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு முழுக்கரும்பு சேர்த்து வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதனால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து, நன்றி தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மயிலாடுதுறை விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததுடன், தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் கரும்பை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: "உயிரை மாய்த்துக்கொள்வோம், எங்கள் வாழ்க்கை முதலமைச்சர் கையில்" - கரும்பு விவசாயிகள் கோரிக்கை