மத்திய அரசு கொண்டு வந்த புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகை அடுத்த திட்டச்சேரி பேருந்து நிலையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யக் கோரியும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுத்தாளர் வே.மதிமாறன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதனிடையே மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திட்டச்சேரி, நடுக்கடை, கொந்தை உள்ளிட்ட பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வர்த்தகர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை மேற்கொள்ளும் சிறுபான்மை இன மக்களுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரளாவைப் போல தமிழ்நாடு அரசும் கொள்கை முடிவு எடுத்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
மேலும், இஸ்லாமியர்களுக்கு இந்தச் சட்டத்தால் பாதிப்பு இல்லை என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இருப்பதால்தான் போராட்டம் நடைபெறுகிறது" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி கேரளா தொடங்கியதை தமிழ்நாடும் தொடர வேண்டும்” எனவும், ”தமிழ்நாடு தீர்மானம் நிறைவேற்றினால் இந்தியாவில் மிகப்பெரிய வலிமையை ஏற்படுத்தும்” எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:
'கூட்டணி என்றால் ஊடலும் கூடலும் இருக்கத்தான் செய்யும்' - கே.எஸ். அழகிரி