மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமாக குருஞானசம்பந்தர் திருமண மண்டபம் உள்ளது. இதனை ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தி வந்தநிலையில், அம்மண்டபம் இடிக்கப்பட்டு தனியார் கட்டடம் ஒன்று தற்போது கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமிர்தகடேஷ்வரர் ஆலயம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தை தனியாருக்கு விற்பனை செய்த தருமபுரம் ஆதின நிர்வாகத்தைக் கண்டித்தும், அந்த இடத்தில் தனியார் கட்டடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதற்கு அனுமதி அளித்த அரசுத்துறை அலுவலர்களைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கட்சியினர் முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.