டெல்டா மாவட்டங்களில் கடந்த எட்டு ஆண்டுகளாக, கர்நாடகாவிலிருந்து வரவேண்டிய காவிரி நீர், மேட்டூர் அணைக்கு வரத்தின்மை, குறைவான மழை என விவசாயிகளை விவசாயத்திலிருந்து பிரித்து வைத்திருந்தது. ஆனால் இந்தாண்டு, கதையே வேறு. எந்த ஆண்டும் இல்லாத அளவு இந்த ஆண்டு மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை பலமுறை எட்டியுள்ளது. அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் பருவமழை விவசாயிகளுக்கு பெருமளவு கை கொடுத்தது.
இந்தச் சூழலை சரியாகப் பயன்படுத்திய விவசாயிகள், டெல்டா மாவட்டம் முழுவதும் சம்பா சாகுபடியில் ஈடுபட்டு, தற்போது பெரும் விளைச்சலை விளைவித்துள்ளனர். வழக்கமாகப் பொங்கல் முடிந்து அனைத்து விவசாயிகளும் சம்பா சாகுபடி செய்த பயிரை அறுவடை செய்வது வழக்கம். அதன்படி, தற்போது நாகை மாவட்டம் முழுவதும் விவசாயிகள் அறுவடையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரே நேரத்தில் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் அறுவடை நடைபெறுவதால், கையால் அறுவடை செய்ய ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், உரிய நேரத்தில் கதிர் அறுக்க, கதிர் அறுக்கும் இயந்திரத்தை விவசாயிகள் நாடிவருகின்றனர்.
குறிப்பாக, நாகை மாவட்டத்தில் மட்டும், நிகழாண்டில் 1.32 லட்சம் ஹெக்டேரில் சம்பா நெல் சாகுபடி நடைபெற்று, நெற் கதிர்கள் அறுவடைக்குத் தயாராகி இருக்கும் நிலையில், அண்மையில் பெய்த மழையால் சில பகுதிகளில் நெல் கதிர்கள் நிலத்தில் முழுவதுமாகச் சாய்ந்துவிட்டன. நிலத்தில் சாய்ந்துள்ள நெற்பயிர்கள் முளைக்கத் தொடங்கியதால் விவசாயிகள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
'காவிரி நதி நீா் பங்கீடு' பிரச்னை காரணமாக நெல் சாகுபடி பெரும் சவாலாகியுள்ளது. அக்காலத்தில் முப்போக சாகுபடி நடைபெற்ற பகுதிகளில், தற்போது ஒருபோக சம்பா சாகுபடி மட்டுமே நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை, அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு, நிர்ணயிக்கப்பட்ட வாடகையைவிட கூடுதலாக தொகை கோரும் அறுவடை இயந்திர உரிமையாளா்கள் என அறுவடை சாா்ந்த பல பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்துவருகின்றனர்.
இதற்கு அரசு உடனடியாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வெளிமாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் அறுவடை இயந்திரங்களை வரவழைத்து அறுவடை இயந்திர தட்டுப்பாட்டினை நீக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பாரம்பரிய நெல் ரகங்களின் ’காப்பான்’