நாகை : வேளாண்துறை வாகனத்தில் மதுபானம் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் மாவட்ட எல்லை வழியாக சாராயம், மது பானங்கள் கடத்தப்படுவதை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
வாகன சோதனை
அதனடிப்படையில், நாகப்பட்டினம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் ஆரோக்கிய டோனிஸ்மேரி தலைமையில் போலீசார் திட்டச்சேரியை அடுத்த நடுக்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த தமிழ்நாடு அரசின் வேளாண் பொறியியல் துறைக்கு சொந்தமான வாகனத்தை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்
அப்போது அந்த வாகனத்தில் மது பாட்டில்கள் இருப்பது கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து வாகனத்தில் இருந்த சாராயம் 200 பாட்டில்கள், 154 குவாட்டர் பாட்டில்கள், நான்கு புல் பாட்டில்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.
இதையடுத்து, வாகன ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில், அவர் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (55) என்பதும், அவருடன் வந்தவர் வேளாண்துறையில் உதவியாளராக பணியாற்றும் அம்பிகாபதி என்பதும் தெரியவந்தது. மேலும் மதுபானங்களை விற்பனைக்காக காரைக்காலில் இருந்து கீழ்வேளூருக்கு கடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு வாகனத்திலேயே மதுபானம் கடத்தப்பட்ட சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: