மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (ஜூன்20) பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. இந்நிலையில் பிறந்தபோதே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்ததால், பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டு, ஆதரவு இல்லத்தில் வளர்ந்து வந்தவர், மாற்றுத்திறனாளி மாணவி லெட்சுமி.
இவர் தமிழ்நாடு முழுவதும் கடந்த மே 05ஆம் தேதி தொடங்கிய +2 பொதுத்தேர்வை, இரண்டு கைகளும் இல்லாதபோதும், நம்பிக்கையுடன் தனது ஆசிரியரின் மூலம் எழுதினார். இந்நிலையில் +2 பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியானதை அடுத்து +2 பொதுத்தேர்வில் 277 மதிப்பெண்கள் பெற்று மாற்றுத்திறனாளி மாணவி லெட்சுமி தேர்ச்சி பெற்றுள்ளார்.
பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்த மாற்றுத்திறனாளி மாணவி லெட்சுமி, மயிலாடுதுறை ஆதரவற்றோர் காப்பகமான அன்பகத்தில் இரண்டு வயது குழந்தை முதல் வளர்ந்து வருகிறார். பெயருக்கேற்றது போல, ஆதரவற்றவர்களுக்கு அன்பை அள்ளித்தந்து வளர்த்த 'அன்பகம்' இவரைப் போன்ற எத்தனையோ பேருக்கு நல்வாழ்வைத் தந்து வருகிறது. தேர்ச்சி பெற்ற மாணவியை காப்பக நிர்வாகி மற்றும் சக மாணவ மாணவியர்கள் பாராட்டி இனிப்பு வழங்கினர்.
இதையும் படிங்க: 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஜூன் 24ஆம் தேதி வெளியீடு