மயிலாடுதுறை: ரயில் பயணிகள் வசதிக்காக குத்தாலம் பகுதியில் தென்னக ரயில் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அதாவது குத்தாலத்தில் இருந்து மயிலாடுதுறை மார்க்கமாக கடலூர், விழுப்புரம், சென்னை போன்ற பெரு நகரங்களுக்கும், கும்பகோணம் வழியாக தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி போன்ற ஊர்களுக்கு செல்லும் 500-க்கும் மேற்பட்ட ரயில்வே பயனாளர்கள் தினசரி இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் ரயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். இந்த ரயில் நிலையத்தின் உள்ளே அமைந்துள்ள கழிப்பிடம் பராமரிப்பின்மை காரணமாக வெகுகாலமாக திறக்கப்படாமல், பூட்டியே கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், அதனைச் சுற்றிலும் புதர் மண்டி காணப்படுகிறது.
இதனிடையே, 2 ஆண்டுகளுக்கு முன்பு ரயில் நிலையத்தின் வாசலில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் (NLC) சார்பில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் போர்ட்டபிள் (portable) டைப் கழிப்பறை கட்டடம் கட்டித் தரப்பட்டது. ஆனால், இந்த கழிப்பறை கட்டடத்தை பராமரிக்க என்எல்சி நிர்வாகமும், ரயில்வே நிர்வாகமும் முன்வராத காரணத்தால் கட்டி முடித்து இரண்டு ஆண்டுகளை கடந்தும் இந்த கழிப்பறை கட்டிடமும் திறக்கப்படாமலேயே மூடிக் கிடக்கிறது.
ரயில் நிலையத்தில் இரண்டு கழிப்பறை கட்டடங்கள் இருந்தும், இரண்டுமே பொதுமக்களுக்கு பயன்படாமல் இருப்பது ரயில்வே பயனாளர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பயனாளர்கள் கழிப்பிடம் இல்லாமல், பொது இடங்களைப் பயன்படுத்துவதாகவும், அதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாமக மாவட்ட இளைஞரணி தலைவர் விமல் கூறுகையில், "ரயில் நிலையத்தின் உள்ளே உள்ள கழிப்பறை கட்டடத்தை ரயில்வே நிர்வாகம் உடனடியாக சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். குத்தாலத்தில் உள்ள அரசினர் மகளிர் பள்ளியில் போதிய கழிப்பறை வசதி இல்லாமல் மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே, ரயில் நிலையத்தின் முன்பு என்எல்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை கட்டடம் 'போர்ட்டபிள் டைப்' என்பதால் அதனை ரயில் நிலையம் பகுதியில் இருந்து அகற்றி அரசினர் மகளிர் பள்ளியில் பொருத்தி மாணவிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்" என அப்பகுதி பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ரூ.1-க்கு 29 பைசா மட்டுமே.. மத்திய அரசை கடுமையாக சாடிய அமைச்சர் தங்கம் தென்னரசு!