நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் இந்த மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதே தேதியில் தமிழ்நாட்டில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கின்றது. இதற்கான தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செ.ராமலிங்கத்தை ஆதரித்து மயிலாடுதுறையில் திராவிடர் கழக பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர், நாட்டிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு உள்ளது. அதனைப் பெற்றுத் தந்த பெருமை திராவிட கழகத்திற்கு உண்டு என கூறினார்.
சமூக நீதியை ஒழிப்பதே ஆர்.எஸ்.எஸ்.இன் கொள்கை. அதை அமல்படுத்தும் அரசாக பாஜக அரசு உள்ளது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் ஜனநாயக குடியரசு இருக்காது என அவர் விமர்சித்துப் பேசினார்.
ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை என்று சொன்ன மோடி ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கரை கோடி பேர் வேலையிழந்ததாக சுட்டிக்காட்டினார். விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் ஏற்படுத்தி தருவதாக சொன்ன மோடி கஜா புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை என தெரிவித்த அவர், 15 ஆயிரம் கோடி ரூபாய் புயல் இழப்பீடு கேட்ட தமிழ்நாட்டிற்கு வெரும்353 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது என சாடினார்.
தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக வராது என்பதால் இந்தத் தேர்தலை பாஜக நிறுத்த நினைக்கிறது என கடுமையாக விமர்சனம் செய்தார்.