புதுச்சேரி மாநிலத்தின் நிதிநிலைமையை கருத்தில்கொண்டு சிக்கன நடவடிக்கையாக, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் விக்ரந்த் ராஜா ஒரு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், "காரைக்காலுக்கு அரசுமுறைப் பயணமாக வரும் முக்கிய விருந்தினர்களை அனைத்து அரசு விழாக்களின்போதும் விலை உயர்ந்த சால்வை அணிவிப்பு, பூங்கொத்து கொடுத்து வரவேற்பதற்குப் பதிலாக மீண்டும் பயன்படக்கூடிய விளையாட்டு உபகரணங்கள் கொடுத்து வரவேற்று அந்த விளையாட்டு உபகரணங்கள் மீது அந்த விருந்தினர்களின் கையொப்பம் பெற்று, அந்த விளையாட்டு உபகரணங்களை பள்ளி மாணவ, மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொடுக்கப்படும்" என்று குறிப்பிட்டுருந்தது.
அதன்படி, அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரைக்காலுக்கு வந்த, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் விக்ரந்த் ராஜா கேரம் போர்டு கொடுத்து வரவேற்றார். அந்த விளையாட்டு உபகரணங்களின் மீது கையொப்பமிட்ட முதலமைச்சர், காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் இந்தச் செயலை பாராட்டி மகிழ்ந்தார்.
மேலும், இனிவரும் காலங்களில் காரைக்காலுக்கு வருகைதரும் தலைவர்கள், உயர் அலுவலர்களுக்கு டென்னிஸ் ராக்கெட், ஃபுட்பால், கிரிக்கெட் பேட், வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுப் பொருள்களை கொடுத்து வரவேற்று அவற்றை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: