நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரை பெரும் பயண பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் மற்றும் திமுக, காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய கி.வீரமணி, " 1920ஆம் ஆண்டில் சமஸ்கிருதம் படித்திருந்தால் தான் மருத்துவம் படிக்க விண்ணப்பிக்கவே முடியும். இந்த நிலையை மாற்றியவர் தந்தை பெரியார். அதே நிலையை மீண்டும் கொண்டு வரும் முயற்சிதான் நீட் தேர்வு. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி, சட்டப்பேரவையில் பேசியதன் விளைவாக ஜெயலலிதா அரசு நீட் தேர்வை எதிர்த்தது. ஜெயலலிதா நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றதுபோல், அடுத்தடுத்த ஆண்டுகளில் விதிவிலக்குப் பெற தற்போதைய அரசுக்குத் தெம்பு இல்லை" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி தேர்வு நடத்தும் உரிமை பல்கலைக்கழகங்களுக்கே உள்ளது. இதில், மத்திய அரசு தலையிடுவது மாநில உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே ரேசன் என்பது ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கை. இவை அனைத்தையும் இந்தியாவில் நடைமுறைப்படுத்துவதற்கான முதல் ஒத்திகையே நீட் தேர்வு முறை. மேலும் மாநிலப் பட்டியலில் உள்ள பொது சுகாதாரத்தை மத்திய அரசே ஏற்று நடத்தும் என மத்திய அரசு அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது" என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், " கருணாநிதியின் முயற்சியால் தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்பட்டது. ஆனால், கரையான் புற்றெடுக்க, கருநாகம் குடிகொண்டதுபோல், இந்த மருத்துவக்கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர்களே அதிக அளவில் படிக்கும் நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசின் உரிமைகளை காற்றில் பறக்கவிடும் மத்திய அரசின் கல்விக் கொள்கையை எதிர்த்து திராவிடர் கழகம் தொடர்ந்து போராடும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: