மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயில் காசிக்கு இணையான ஆறு கோயில்களில் முதன்மையான திருக்கோயிலாகவும், சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் அகோரமூா்த்தியாக தனி சன்னிதியில் அருள்பாலித்து வருவது சிறப்புக்குரியதாகும்.
மேலும், நவ கிரக தலங்களில் கல்வி, தொழில் ஆகியவற்றின் அதிபதியான புதன் பகவானுக்குரிய ஸ்தலமாக விளங்குகிறது. இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திர விழா இந்தாண்டு இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையடுத்து, முன்னதாக, கொடிமரத்துக்கு பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா மார்ச் 3 ஆம் தேதியும், தெப்பத்திருவிழா மார்ச் 6 ஆம் தேதியும் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு: சீறிப்பாயும் காளைகளை ஆர்வமுடன் அடக்கும் இளைஞர்கள்!