நாகை மாவட்டம் உத்திரங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (32). இவர் சென்னையில் தங்கி ஒரு உணவகத்தில் வேலை செய்துவருகிறார். இவருக்கு தன் தாய்மாமன் மகள் தேவிக்கும் (32) திருமணமாகி ஒன்பது ஆண்டுகளாகின்றன. இவர்களுக்கு எட்டு வயதில் ஜனனி என்கிற மகளும், மூன்று வயதில் ஜெயமித்திரன் என்னும் மகனும் உள்ளனர்.
உத்திரங்குடியில் ரமேஷ் தன் மனைவி குழந்தைகள், தாய் மல்லிகா, சகோதரர் சுரேஷ் ஆகியோர் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்துவந்துள்ளார். தேவிக்கும் ரமேஷ் குடும்பத்தினருக்கும் இடையே பிரச்னை இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி இரவு 11 மணிக்கு மேல் தேவி, குழந்தைகள் ஜனனி, ஜெயமித்திரன் ஆகியோர் திடீரென காணவில்லை. இதையடுத்து சுரேஷ், தாய் மல்லிகா, கிராமத்தினர் தேவியை இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை தேவி அப்பகுதியில் உள்ள அர்ஜுனன் குட்டை அருகிலுள்ள மரத்தில் தூக்குபோட்ட நிலையில் பிணமாகக் கிடந்துள்ளார். அவருக்கு அருகிலிருந்த குட்டையில், குழந்தைகள் ஜனனி, ஜெயமித்திரன் ஆகியோர் இறந்த நிலையில் மிதப்பதை குடும்பத்தினர் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின் தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த பொறையார் காவல் துறையினர் உடல்களை மீட்டு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர்.
குடும்பப் பிரச்னை காரணத்தால் குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணயில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவலர்கள் மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் இறந்துள்ள சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.