ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட, ஒன்றிய தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. அதன்படி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட தலைவருக்கான மறைமுகத் தேர்தலில், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற 21 கவுன்சிலர்களில் திமுக, அதிமுக சார்பில் ஒருவத்தரை தவிர மற்ற 20 பேர் கலந்துகொண்டனர்.
இதில் 11ஆவது வார்டு திமுக கவுன்சிலர் உமா மகேஸ்வரி என்பவர் 13 வாக்குகளும், 8ஆவது வார்டு திமுக கவுன்சிலர் வெண்ணிலா என்பவர் 7 வாக்குகளும் பெற்றனர். இதில் 13 வாக்குகள் பெற்ற உமாமகேஸ்வரி நாகை மாவட்ட ஊராட்சித் தலைவராக வெற்றிபெற்றதாக அம்மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் அறிவித்தார்.
இதேபோல் நாகை மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் மறைமுகத் தேர்தலில் பங்கேற்று அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வாக்களித்தனர். இதில் நாகையில் 14 ஒன்றிய கவுன்சிலர்களில் நாகை ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவைச் சேர்ந்த அனுசுயா என்பவர் 8 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
இது தவிர கீழ்வேளூர் ஒன்றியத்தில் 12 கவுன்சிலர்களில் கீழ்வேளூர் ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவைச் சேர்ந்த வாசுகி என்பவர் 7 வாக்குகள் பெற்று ஒன்றியக் குழுத் தலைவராக வெற்றிபெற்றார். கீழையூர் ஒன்றியத்தில் 12 கவுன்சிலர்களில் திமுகவைச் சேர்ந்த செல்வராணி என்பவர் 7 வாக்குகள் பெற்று ஒன்றியக் குழுத் தலைவராக தேர்வானார்.
சீர்காழி ஒன்றியத்தில் 21 கவுன்சிலர்களில் திமுகவை சேர்ந்த கமலஜோதி என்பவர் 11 வாக்குகள் பெற்று ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செம்பனார்கோவில் ஊராட்சியில் 30 கவுன்சிலர்களில் திமுகவைச் சேர்ந்த நந்தினி என்பவர் 21 வாக்குகள் பெற்று ஒன்றியக் குழுத் தலைவராக வெற்றிபெற்றார். தலைஞாயிறு ஒன்றியத்தில் 11 கவுன்சிலர்களில் திமுகவைச் சேர்ந்த தமிழரசி என்பவர் 7 வாக்குகள் பெற்று ஒன்றியக் குழுத் தலைவராக வெற்றி வாகை சூடினார்.
கொள்ளிடம் ஊராட்சியில் 23 கவுன்சிலர்களில் திமுகவைச் சேர்ந்த ஜெயப்பிரகாசம் என்பவர் 13 வாக்குகள் பெற்று ஒன்றியக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மயிலாடுதுறை ஒன்றியத் தலைவருக்கான தேர்தலில் 27 ஒன்றிய கவுன்சிலர்களில் திமுகவைச் சேர்ந்த காமாட்சி மூர்த்தி என்பவர் 14 வாக்குகள் பெற்று ஒன்றியக் குழுத் தலைவராக வெற்றிபெற்றார். இதையடுத்து நாகை மாவட்டத்தில் திமுக 8 இடங்களை கைப்பற்றிய வெற்றிபெற்றது.
இதையும் படியுங்க: ஒன்றியத் துணைத்தலைவர் தேர்தலில் நுழைந்த திமுக எம்எல்ஏ - சிசிடிவி காட்சிகள் வெளியீடு!