மயிலாடுதுறை: சீர்காழி வட்டம் திருமுல்லைவாசல் பகுதியில் கடந்த 2013ஆம் ஆண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து தொடர்பாகச் சீர்காழி போலீசார் வழுதலைகுடி கிராமத்தைச் சேர்ந்த அசோக் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தற்போது சீர்காழி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
விசாரணைக்கு அசோக் ஆஜராக வேண்டும், ஆனால் அவருக்குப் பதில் அவரது அண்ணன் குணசேகரன் (43) ஆஜராகி ஆள்மாறாட்டம் செய்துள்ளார். கடந்த 9ஆம் தேதி அன்று மீண்டும் குணசேகரன் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் குணசேகரனை கைது செய்து சீர்காழி காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் அசோக் வேலைக்காக வெளிநாடு சென்றதால் அவருக்குப் பதில் அவரது அண்ணன் குணசேகரன் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்துள்ளது. மேலும் நீதிமன்ற விசாரணையில் ஆள் மாறாட்டம் நடைபெற்றது குறித்து வழக்குரைஞர் குமாஸ்தா திருஞானம் மற்றும் சீர்காழி நீதிமன்ற காவல்துறை ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய கனிமவளத்துறை உதவி இயக்குநர் கைது!