நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் த.பாலசுப்பிரமணியன் கலந்துகொணடார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், "ஆன்மிக நகரமான மயிலாடுதுறையில் சேதமடைந்து காணப்படும் மயூரநாதர், திருக்கடையூர் அபிராமி கோயில்கள் சீரமைக்கப்பட வேண்டும்.
மத்திய அரசின் நிதி உதவியுடன் அமையவுள்ள அரசு மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும். இதற்காக, மயிலாடுதுறையில் 25 ஏக்கர் நிலம் வழங்க அகில பாரத இந்து மகா சபா தயாராகவுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாட்டில் நடைபெறும் போராட்டங்கள் மத கலவரத்தை உருவாக்கக்கூடியது. இந்தச் சட்டங்களால் இந்தியாவில் வசிக்கும் யாருக்கும் பாதிப்பு இல்லை. 50 வருடங்களுக்கு முன்பு இலங்கை இந்தியாவுடன் சேர்ந்தது.
எனவே இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்து மீண்டும் அங்கு செல்ல முடியாத நிலையில் உள்ள தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வேண்டுமென்பது அகில பாரத இந்து மகா சபாவின் நோக்கம். பெரியார் குறித்து பத்திரிகைகளில் வந்ததைதான் ரஜினிகாந்த் பேசினார். அவர்களுக்கு எதிராக பேசிய போது வரவேற்றார்கள். இப்போது, பெரியாரைப் பற்றி பேசும் போது விமர்க்கிறார்கள். ரஜினிகாந்த் காவி பக்கமும் இல்லை, கருப்பின் பக்கமும் இல்லை அவர் எங்கு இருக்கிறார் என்பது அவருக்குத்தான் தெரியும்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வந்தார். பின்னர் அதை வாபஸ் பெற்றார். கோயில்கள், மருத்துவமனைகள், சிறைச்சாலைகள் என அனைத்து இடங்களிலும் மத மாற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன. எனவே, தமிழ்நாட்டில் மீண்டும் அந்தச் சட்டத்தை கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டில் குடமுழுக்கு செய்யப்படாமல் உள்ள அனைத்து கோயில்களிலும் குடமுழுக்கு நடத்த வேண்டும். பெரியாரின் தலைமையில் ராமரை அவமரியாதை செய்யப்பட்ட சேலத்தில் இந்த ராமநவமியன்று, அகில பாரத இந்து மகா சபா சார்பில் ராமநவமி விழா நடத்தவும் ராமநாத ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
தொடர்ந்து பேசுகையில், மார்ச் மாதம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படவுள்ளது. இதுபோல் தமிழ்நாட்டில் 100 இடங்களில் ராமர் கோயில் கட்டும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அயோத்தி போலவே காசியையும், மதுராவையும் இஸ்லாமியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு கொடுத்துள்ளோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:
கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் காசு வாங்காதே - இந்து முன்னணி ராமகோபாலன்