மயிலாடுதுறை: மயிலாடுதுறையின் குத்தாலம் பேரூராட்சியில் நதியா, வேம்பு, ராதிகா, ஜெயா ஆகிய 4 பெண்கள் சுகாதார பரப்புரையாளர்களாக வேலை பார்த்து வந்தனர். கடந்த 7 ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த நால்வரது ஒப்பந்தமும் ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது.
இந்நிலையில் திமுகவினரின் தலையீட்டால் நால்வரையும் பணிநீக்கம் செய்துவிட்டு, அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வேலை பறிபோன சோகத்திலிருந்த நதியா மனமுடைந்து, செப்டம்பர் 5ஆம் தேதி வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
ஆடியோ பதிவு வைரல்
பின்னர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நதியா, சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்த நதியாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி, அவரது உறவினர்கள் உடலை வாங்காமல் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் பணிநீக்கம் குறித்து உயிரிழந்த நதியா, திமுக நிர்வாகி சுந்தர்ராஜன் ஆகியோர் உரையாடிய ஆடியோ பதிவு தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது இதுகுறித்து அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையிலானோர், குத்தாலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உயிரிழப்புக்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “ஏழை, எளிய மக்களுக்கு பாதுகாப்பாக இருப்போம் என தமிழ்நாடு முதலமைச்சர் கூறினாலும், திமுக நிர்வாகிகள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். இறந்த நதியாவின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க:காப்பாற்றாத கடவுள் - விநாயகர் சிலையை கரைக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்