மயிலாடுதுறை : இந்திய விளியாட்டு ஆணையம் ,ராஜிவ் காந்தி உள் விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான கைப்பந்துப் போட்டி இரவு தொடங்கியது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்பு:
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாகை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக 2 நாள் நடைபெறும் இந்தப் போட்டியில் சென்னை, மதுரை, திருச்சி, மயிலாடுதுறை, பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆடவர் பிரிவில் ஏழு அணிகளும், மகளிர் பிரிவில் ஐந்து அணிகளும் பங்கேற்று லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் போட்டி நடைபெறுகிறது.
ரூ.25,000 வரை பரிசுத்தொகை:
போட்டியில் ஆடவர் பிரிவில் முதலிடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.25,000, இரண்டாம் பரிசு பெறுபவர்களுக்கு ரூ.20,000 எனப் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இதேபோல் மகளிர் பிரிவில் முதல் பரிசாக ரூ.20,000, இரண்டாம் பரிசாக ரூ.15,000 எனப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. தொடர்ந்து மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடைபெறுகிறது.
நாக்-அவுட் முறையில் நடக்கும் போட்டி:
இந்தப் போட்டியானது நாக்-அவுட் சுற்றில் நடைபெறுகிறது. மாநில அளவிலான ஆடவர் பிரிவு போட்டிகளை பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்.
இந்தப் போட்டியில் மயிலாடுதுறை சாய் அணி - திருச்சி ஜெயின் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும் மோதின.
இதே போல், மகளிருக்கான முதல் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம். யுனிவர்சிட்டி, மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணையம், மயிலாடுதுறை சாய் அணியினர் பங்கேற்றனர்.
பரபரப்பாக நடைபெற்ற போட்டிகளை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜ குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பார்வையாளர்கள் போட்டிகளை கண்டுக்களித்தனர்
இதையும் படிங்க;தயார் நிலையில் இருங்கள்! - ஐஜிக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு