நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் இருதரப்பினரிடையே பல காலமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், மாலை வேதாரண்யம் காவல்நிலையம் எதிரே பாண்டி என்பவர், காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது, ராமகிருஷ்ணாபுரத்தைச் சார்ந்த பத்துபேர் கொண்ட கும்பல், அவரது காரை அடித்து நொறுக்கி தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
காவல்துறையினர் அனைவரும் வேளாங்கண்ணி திருவிழா பாதுகாப்புப் பணிக்கு சென்றுவிட்டதால், காவல்நிலையத்தில் இரண்டு பேர் மட்டுமே இருந்துள்ளனர். காவலர்கள் இரண்டு பேரும் கலவரத்தைத் தடுக்க முயன்றபோது, காவல்நிலையம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அப்போது, பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் பயத்தில் அலறியடித்து ஓடினர்.
கலவரம் பெரிதானதால் இருதரப்பினரும் சராமாரியாக தாக்கி கொண்டது மட்டுமல்லாமல் பேருந்து நிலையம் அருகே இருந்த அம்பேத்கர் சிலையையும் சிலர் அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும், இச்சம்வத்தில் படுகாயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகை அதிரடிப்படையினர், அப்பகுதியில் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
வேதாரண்யம் கலவரப்பூமியாக மாறிய நிலையில் வெளியூர் செல்லும் மக்கள் மாலை முதல் பேருந்து இல்லாமல் தவித்து வருகின்றனர். வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டதால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஒரு தரப்பினர் அம்பேத்கர் சிலையை சிதைக்கும் வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளதால், அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.