நாகை மாவட்டம் குத்தாலம் அடுத்துள்ள திருவாவடுதுறை ஆதீனத்தில் சென்னை தமிழ்ச் சங்கம் மற்றும் திருவாவடுதுறை ஆதினம் இணைந்து நடத்திய தெய்வீக தேவார திருவிழா நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், திருமூலர் திருமந்திரம் என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை தமிழ் சங்கத் தலைவர் தியாக.இளங்கோவன், தமிழ்நாடு அரசு இசைப்பள்ளி கலை மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குநர் பூரண புஷ்கலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி, "தமிழ் மொழியின் வளர்ச்சியில் தேவாரம், திருவாசகம் ஆகியவற்றிற்குப் பங்கு உண்டு. தெய்வப் பக்தியுடன் தமிழை வளர்த்தனர். இன்று ஆலயங்களில் தேவாரம் பாடும் ஓதுவார்கள் எண்ணிக்கை குறைந்து வருகின்றது.
போதிய சம்பளம் இல்லாததால் ஆலயங்களில் தமிழ் வேதங்கள் பாடுவதற்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனைச் சரிசெய்ய அரசே கோயில்களில் ஓதுவார்களை நியமித்து சம்பளம் வழங்க வேண்டும்" என்று கூறினார்.
மேலும், உழவாரப் பணிகளைச் செய்வதற்கு தற்போது ஆட்கள் முன்வருவதில்லை என்றும், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி அனைத்து சமுதாயத்தையும் அரவணைத்து நல்லது செய்வதுபோல தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் என்றும் அவர் பேசினார்.
இதையும் படிங்க: 'பெருமாள் கோயிலுக்கு ஈ.சி.ஆரில் முதலமைச்சர் இடம் ஒதுக்கியுள்ளார்' - திருப்பதி தேவஸ்தானம்