மயிலாடுதுறை அருகே கீழபட்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் யோவான் மகள் சத்யா (23). இவரது ஆட்டை கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவரது மனைவி சமுத்திரம் (60), அவரது மகள் துர்காதேவி (25) ஆகியோர் பிடித்துச் சென்றதாக ஊர் பஞ்சாயத்தில் சத்யா புகார் அளித்தார். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது.
இதையடுத்து, நேற்று (அக்.03) காலை சத்யாவை, துர்காதேவியும், அவரது தாயார் சமுத்திரமும் வழிமறித்து ஊர்பஞ்சாயத்தில் கொடுத்த புகாரை திரும்ப வாங்குமாறு கேட்டுள்ளனர். அதற்கு சத்யா மறுத்ததால் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தாயும், மகளும் "நீ உயிரோடு இருந்தால்தானே பஞ்சாயத்துக்குப்போவாய்" என்று கூறி இருவரும் சேர்ந்து சத்யாவை தாக்கியுள்ளனர்.
அப்போது துர்காதேவி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்யாவை குத்தியுள்ளார். இதில் காயமடைந்த சத்யா வழிதாங்க முடியாமல் சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனை கண்டு இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
அதன்பின்னர் அருகில் இருந்தவர்கள் சத்யாவை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சத்யா அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல்துறை துர்காதேவி, அவரது தாயார் சமுத்திரம் ஆகிய இருவரையும் கைது செய்து கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.