நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகாரை அடுத்த தர்மகுளம், தரும விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மகாதேவன்(40). இவர் அதே பகுதியில் மரம் இழைப்பகம் மற்றும் கண்ணாடி, பிளைவுட் கடை வைத்து நடத்திவருகிறார்.
இவரது கடையில் மேலையூர் அடைக்கலபுரத்தைச் சேர்ந்த சண்முகராஜ் (20), இளையமதுகுடம் கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் (26) ஆகிய இருவரும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்று விற்பனைக்காக கண்ணாடிகளை எடுக்க முயன்றபோது கண்ணாடிகள் சரிந்து விழுந்தது. இதில் கண்ணாடிகளுக்கிடையே இருவரும் சிக்கி உயிருக்குப் போராடினர்.
அவர்களை மீட்கச் சென்ற கடை ஊழியர் மகாதேவனும் காயமடைந்தார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் சீர்காழி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்குத் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கண்ணாடிகளுக்கிடையே சிக்கிய இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே காளிதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையறிந்த சீர்காழி காவல் துறை கண்காணிப்பாளர் வந்தனா நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
மேலும் இச்சம்பவம் குறித்து பூம்புகார் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். எதிர்பாராதவிதமாக கண்ணாடி சரிந்து விழுந்து ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.