நாகை : மயிலாடுதுறையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ”முதலமைச்சரின் உத்தரவின் படி உணவுத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.மயிலாடுதுறை மாவட்டத்தில் எருக்கூர் நவீன அரிசி ஆலையில் சைலோ பயன்பாடு எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்கிறோம்.
திருச்சி, பெரம்பலூர், கரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, அரியலூர், திருவாரூர் உட்பட பல மாவட்டங்களில் அலுவலர்களுடன் ஆலோசனை செய்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். நேரடிகொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை உடனடியாக வாங்குவதற்கும், பணம் உடனடியாக வழங்குவதற்கு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குத்தாலம் அருகே திறந்தவெளிசேமிப்பு கிடங்களில் நெல்மூட்டைகள் அடுக்கியிருப்பதை பார்வையிட்டோம்.
கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் சிப்பத்திற்கு 40 ரூபாய் பணம் பெறுவதை இனிவாங்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளோம். லோடுமேன், அலுவலர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்க முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று உயர்த்த உள்ளோம். டிகேஎம் 9 அரிசி மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதை மக்கள் விரும்பவில்லை என்று மக்கள் பிரதிநிதிகள் கூறினர்.
அந்த அரிசியைவழங்கக்கூடாது. மக்கள் விரும்பும் அரிசியை வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் சைலோ அமைத்து எப்படி கொள்முதல் செய்கிறார்களோ அதுபோல் நெல்லை சேதமடையாமல் கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 6 மாதத்திற்குள் ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நெல் ஆதாரவிலை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. மாநில அரசு உயர்த்தி வழங்குவது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார். நேரடி கொள்முதல் நிலையங்களில் வரும் குறுவை பருவத்தில் டிகேம் 9, உமா போன்ற நெல் ரகம் மட்டுமல்ல விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து விதமான நெல்லையும் நேரடிகொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும்” என்றார்.
இதையும் படிங்க:
சிவசங்கர் மாணவிகளுக்கு தாத்தா மாதிரி - பாபாவை விட்டுக்கொடுக்காத ஆசிரியர்கள்!