மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்துள்ள பூம்புகார் மீனவ கிராம மீனவர்கள், சுருக்கு வலை தடைவிதித்ததைக் கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டம், தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று (மார்ச் 22) சந்திரபாடி மீனவ கிராமத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் பிற மாநிலங்களில் சுருக்குவலையைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் சுருக்கு வலைக்கு அரசு தடைவிதித்துள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மீனவர்களுடன் ஆலோசனை நடத்தாமல் அரசு சுருக்கு வலைக்கு தடைவிதித்துள்ளது. இந்த முடிவை மீண்டும் மறுபரிசீலனை செய்து சுருக்குவலையைப் பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
போராட்டத்தின்போது மீனவர்கள், சுருக்கு வலைக்கு மீண்டும் அனுமதி வழங்குவது உடன் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவேற்றிய கடல்சார் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், இப்பகுதியில் உள்ள இறால் பண்ணைகளை முற்றிலுமாக அகற்ற வேண்டும். இல்லையென்றால் வரும் சட்டப்பேரவைத் தேர்தல் புறக்கணிப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றினர்.
சுருக்குவலை தடை காரணமாக ஏற்கனவே ஒன்பது மீனவ கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு, தர்ணாவில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது பத்தாவதாக சந்திரபாடி மீனவ கிராமங்கள் களம் இறங்கியது அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.