நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே பழையார் மீனவர் கிராமத்தில் சீன இஞ்சின் படகு பயன்பாடு குறித்து இருதரப்பினரிடையே ஜூலை மாதம் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து இருதரப்பினரிடமும் நடைபெற்ற சமாதான கூட்டங்களும் தோல்வியில் முடிந்ததால் 130 நாட்களாக யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை என தெரிகிறது.
இந்நிலையில், சாதாரண விசைப்படகு வைத்துள்ள மீனவர்களுக்கு மட்டும் மீன்பிடிக்க அனுமதி வழங்கிய மீன்வளத்துறை, காவல்துறை மூலம் சுற்றறிக்கை அனுப்பியது. இதனால் ஆத்திரமடைந்த அதிவேக சீன விசைபடகு மீனவர்கள், மீன்வளத்துறை அலுவலர்களை கண்டித்து பழையார் துறைமுகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீன்வளத்துறை இணை இயக்குநர் நடராஜனை முற்றுகையிட்டு பெண்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, இருதரப்பினரையும் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து, உயர் அலுவலர்களிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மீன்வளத்துறை இணை இயக்குநர் நடராஜன் உறுதியளித்தார். இதனால், தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.