மயிலாடுதுறை: மயிலாடுதுறையின் தரங்கம்பாடியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். சுமார் 400க்கும் மேற்பட்ட பைபர் படகுகளை பயன்படுத்தி, மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர். இந்தப் பைபர் படகுகளில் டீசலால் இயங்கும் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது.
இந்த வகை இன்ஜின் கொண்ட படகுகளை இயக்கும்போது, அதிக விசை அழுத்தம் காரணமாக மீனவர்கள் உடல் வலி, எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்குள்ளாகின்றனர். இதனால் டீசல் இன்ஜினுக்கு பதிலாக, பெட்ரோல் இன்ஜினுக்கு மீனவர்கள் மாறி வருகின்றனர்.
மானிய விலையில் எரிவாயு?
இருப்பினும் தற்போது பெட்ரோல் அதிக விலைக்கு விற்கப்படுவதால், கடுமையான பொருளாதார இழப்பினை மீனவர்கள் சந்திக்கின்றனர். இதற்கு தீர்வு காண எண்ணிய மீனவர் தெய்வராஜ், தனது இஞ்சின் படகை எரிவாயுவின் மூலம் இயக்குமாறு வடிவமைக்கக்கோரி தரங்கம்பாடி ஹைடெக் ஆராய்ச்சி நிறுவனத்தை அணுகினார்.
இதனையடுத்து ஹைடெக் ஆராய்ச்சி நிறுவனம், மெக்கானிக் சுரேஷ் ஆகியோர் இணைந்து, முழுவதும் எரிவாயுவால் இயங்குக் கூடிய பிரத்யேக படகினை உருவாக்கியுள்ளனர். மாற்றம் செய்யப்பட்ட இந்த படகானது கடலில் தொடர்ந்து பலமணிநேரம் இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
முன்னர் சராசரியாக ரூ. 400 பெட்ரோல் செலவில், 15.8 நாட்டிகல்மைல் தூரம் கடலில் மீனவர்கள் சென்று வந்தனர். இதற்கு மாற்றாக 9.9 குதிரைதிறன் கொண்ட என்ஜின் மூலம் இயக்கப்படும் எரிவாயு படகானது, அதே தொலைவை ரூ.300 என்ற எரிபொருள் செலவுடன் கடக்கிறது.
இதன் மூலம் எரிபொருள் செலவு மிகவும் குறைவதுடன், உடல் நலனும் பாதுகாகப்படுவதாக மீனவர் தேவராஜ் தெரிவித்துள்ளார். எரிவாயு இஞ்சின் படகுக்கு அனுமதி வழங்குவதுடன், எரிவாயுவை மானிய விலையில் வழங்கவும் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கோமாளிகளே 'இல்லம் தேடி கல்வி' திட்டம்தான் திராவிடம் - ஸ்டாலின் அதிரடி