நிவர் மற்றும் புரெவி என அடுத்தடுத்த புயல்களின் தாக்கத்தால், நாகை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களும், தோட்டக்கலை பயிர்களும் பாதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், புயல் சேதங்களை மதிப்பிடுவதற்காக வந்த 8 பேர் கொண்ட மத்திய குழுவினர், நாகை மாவட்டம் கருங்கண்ணி மற்றும் வடக்கு பனையூரில் இன்று ஆய்வு செய்தனர்.
அப்போது அவர்களிடம் கடன் வாங்கி நட்ட பயிர்கள் அனைத்தும் மழை வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க, விவசாயிகள், கீழ்வேளூர் சட்டப்பேரவை உறுப்பினர் மதிவாணன் ஆகியோர், மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் அசுடோஸ் அக்னி கோத்ரியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர், புயல், மழை தாக்கத்தால் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 82 ஆயிரம் ஹெக்டர் நெற்பயிர்களும், 550 ஹெக்டர் தோட்டக்கலை பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கொள்ளிடம், நள்ளம்மல், கருங்கண்ணி, வடக்கு பனையூர் ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய கீழ்வேளூர் சட்டப்பேரவை உறுப்பினர் மதிவாணன், ” புயல் பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் மறு சாகுபடி செய்ய இலவசமாக விதை உள்ளிட்ட இடுபொருட்கள் வழங்க வேண்டும். ஒவ்வொரு முறையும் பேரிடர் பாதிப்புகளில் மத்திய குழு ஆய்வு மேற்கொண்டு சென்று விடுவது போல அல்லாமல், இந்த முறை பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் ” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’நான் கிராமத்தில் வளர்ந்தவன் என்பதால்...’ வாக்குகளை சேகரிக்கும் எடப்பாடி