மயிலாடுதுறையில் வானதிராஜபுரம், கடலங்குடி, மன்னம்பந்தல், காத்திருப்பு, செம்பதனிருப்பு, அல்லிவிளாகம், சங்கரன்பந்தல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கரில் பொங்கல் கரும்பான செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு சேர்க்கப்பட்டிருந்த நிலையில், 2021ஆம் ஆண்டு ஆட்சிபொறுப்பேற்ற திமுக அரசும் கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு ரூ.15 வழங்கி விவசாயிகளிடம் இருந்து செங்கரும்பினை கொள்முதல் செய்தது.
இதனை நம்பி கடந்த ஆண்டை விட கூடுதலான நிலப்பரப்பில் இந்த ஆண்டு கரும்பு விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். ஆனால், தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்குவதாக அறிவிக்கவில்லை. இதனால் கரும்பு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு கரும்புகளை கொள்முதல் செய்யாததால், தனியார் வியாபாரிகள் விவசாயிகளை அணுகி ரூ.10க்கும் குறைவாக விலை பேசுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அரசை நம்பி விவசாயிகள் கூடுதலாக கரும்புகளை பயிரிட்ட நிலையில் அரசு விவசாயிகளை வஞ்சிப்பது கண்டனத்துக்குரியது என்றும், நிகழாண்டு பொங்கலுக்கு செங்கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக குத்தாலம் தாலுகா வானதிராஜபுரம் கிராமத்தில் கரும்பு விவசாயிகள் தங்கள் வயல்களில் பயிரிட்டுள்ள கரும்புகளில் கருப்பு துணியைக் கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரும்புகளை கொள்முதல் செய்து பொங்கல் தொகுப்பில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உடனடியாக பொங்கல் தொகுப்பில் செங்கரும்பையும் சேர்த்து அரசு அறிவிக்காவிட்டால் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் கரும்பு விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:கேரளாவில் வேகமாகப் பரவும் பறவைக் காய்ச்சல் - 6,000 பறவைகள் அழிப்பு!