நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த பாசன வாய்காலான அடப்பாற்றில் நீர் திறக்க வலியுறுத்திய விவசாயிகள், இயக்கு அணையில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர், வேதாரண்யம் பகுதி அடப்பாற்றின் தலைமடையான மணலி இயக்கு அணை வரை வந்துள்ளது. ஆனால், குடிமராமத்து பணிகளால் கடைமடைக்கு நீர் திறக்கவில்லை. இதனால், காவிரி நீரை நம்பி குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடைமடை பகுதிக்கு உடனடியாக நீர் திறக்கவேண்டும் என வலியுறுத்தி துளசாபுரம் இயக்கு அணையின் கீழ்தளத்தில் படுத்து அப்பகுதி விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பல பகுதிகளில் நீர் வீணாக கடலில் கலப்பதாகவும் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், பொதுப்பணித் துறை அலுவலர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளை புறக்கணித்து வருவதாக குற்றஞ்சாட்டி கோஷங்களை எழுப்பினர்.