மயிலாடுதுறை: விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலை 45ஏ (NH 45A) என்னும் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் முதல் பொறையார் வரை நான்கு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெறுகின்றன. கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால் பொதுமக்கள், விவசாயிகள் எனப் பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்திவருகின்றனர்.
இழப்பீடும், மாற்று இடமும்
இந்நிலையில், தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ள நான்கு வழிச்சாலை ஒப்பந்த நிறுவனமான வில்ஸ்பன் நிறுவன அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தரங்கை, செம்பை, சீர்காழி ஒன்றிய குழுக்கள் சார்பில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் ஆகியவற்றை வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுனர்.
கஞ்சித் தொட்டி திறப்பு
மாவட்டத் தலைவர் சிம்சன் தலைமையிலும், ஒன்றியச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், மார்க்ஸ், அசோகன் ஆகியோர் முன்னிலையிலும் தொடங்கப்பட்டுள்ள இப்போராட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தை ஒட்டி சீர்காழி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லாமேக் தலைமையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சீர்காழி கோட்டாட்சியர் நாராயணன் தலைமையிலான வருவாய்த் துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், அவர்கள் கஞ்சித்தொட்டி திறந்து கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருப்புப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: அருள்மிகு ஸ்ரீ கச்ச பரமேஸ்வர ஆலயத்தில் பல்லக்கைத் தூக்கி வந்த பெண்கள்!